Tuesday, June 15, 2010

மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல !!


இரவில் ஒரு பகலையும்,
பகலில் ஒரு இரவையும் ,
நினைவுகளில் சில நிஜத்தையும்
சில நிஜங்களில் பல நினைவுகளையும்  
உரசிய மனம் சொன்னது,இவை
மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல என்று!

Thursday, June 10, 2010

நினைவுகளும் அதன் பதிவுகளும்

உன் பாதச் சுவடுகள் பதிந்திருக்கும்
ஒவ்வொரு கடற்கரை மணலிலும்
கலந்திருக்கிறது உனக்கான
என் நினைவுகள் !

அதிகமாய் அழுத்தி விடாதே
ஆழமாய் இறங்குகிறது மனம்
உன் பாத சுவடில் தொலைத்துவிட்ட
என் உலகத்தை தேடி !!

உனக்கான என் காதலை
வர்ணிக்க விழைகையில் , அறிந்தேன்
அந்த சில நிகழ்வுகள்
சந்தர்ப்பவசமானவை , ஆனால்
அதன் பதிவுகள் என்றும்
நிரந்தரமானவை !!

Wednesday, May 26, 2010

அவன் ஒரு பறவை தான்




கற்பனை செய்துவிட முடியாத
அந்த நொடியில், காதலின்
அட்சய குவளையை நிரப்பி
சிறகுகளற்ற அவன் நினைவுகளோடு
ஏதோவொரு மூலையிலிருந்து ,
எனக்காக கொண்டு வந்து சேர்க்கும்
அவன் ஒரு பறவை தான்!

Tuesday, March 2, 2010

காற்று !!

கனவில் கூட
கனத்த நிஜங்களில் ,உன்
மூச்சுகாற்றை  தேடியே
என் பயணம் !

* * * * * * * * *

உதட்டு சூட்டில்
உன் அருகாமையை
உணருகிறேன் ,
உன்னை ஸ்பரிசித்த
சுவாசகாற்று !!

Thursday, August 20, 2009

உன்னை நான் அறிவேன் !!



பேசாத என் பெண்மையை
சித்திரமாய் முன் நிறுத்த
உன் இதழ் பிரியா ஓர்
புன்னகை போதுமே !!

***************************************


உன் ஒவ்வொரு இமைதட்டும்
உரசி பார்க்கும் உள்ள உணர்வுகளை
வார்த்தைகளிட்டு கூற இயலாமல்
உன்னை பார்த்தபடி நான்
என் விழிகள் பார்த்தபடி நீ !!

*****************************

நீ இல்லாத நேற்று
இன்றைய குழப்பம்
நாளைய பதில்கள்
யதார்த்தம், இதை
தான் காதலிக்கிறேன் !!

****************************

உன்னுடனான நேரத்தில்
என் உதடுகள் இமைக்க மறந்த
பொழுதில் உணர்ந்தேன், அங்கே
பேசிகொண்டிருப்பது உன்
விழிகள் என்று !!

********************************


பகலை தொடர்ந்த
இரவை தொடர்ந்து
விடியலும் வருமென
உனக்காய் காத்திருக்கிறேன்!

Tuesday, July 28, 2009

வார்த்தை இல்லா கவிதை !!


வாசிக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
மறந்து போகிறேன்
வார்த்தை இல்லா
கவிதை, எனக்கு
நீ என்று !!


~~~~~~~~~~~~~~~~~~~~~

"கைய பிடி" என்று அதட்டல் போட்டு ,
என் கரம் பற்றி, பிஞ்சுக் குழந்தை,
பாதுகாக்கும் மயிலிறகாய், கூட்ட
நெரிசலில் எனை அழைத்து வரும்
உனை வாசிக்க முயற்சிக்கையில்,
காதல் மேல் காதல் பிறக்கிறது !!

Monday, July 27, 2009

நினைவுகள் கொல்லும் தனிமை !!



கூர்காவின் விசில் சத்தம், இரவில்
கேட்டு நான் அலறுவதற்குள்,எனக்கு
முன்னே எழுந்து "ஒண்ணுமில்லடா.." என்று
தடவி கொடுக்கும் என் அம்மாவின் ,
நினைவுகளால் கொல்லப்பட்டும் ,
என் தனிமை !!
******************************************************

"ஐயோ பாவம், எளச்சி போய்ட்டா" என்று
நான் உறங்கையில், தலை கோதியும்,
"எனக்கென்னயா, பொண்ணு ராஜா மாதிரி பாதுக்குறா"
என்று ஊரில் பெருமை பேசும், என் அப்பாவின்
நினைவுகளால் கொல்லப்பட்டும் ,
என் தனிமை !!
********************************************************
"மச்சான் எங்கக்கா வராங்க, திங்கட்கிழமை
காலேஜ்ல பார்க்கலாம்டா " என்று எனக்காக
புன்னகைத்து, இரவு எத்துனை மணி ஆயினும்,
என்னை அழைத்து வர வந்து சேரும்,
என் தம்பியின் நினைவுகளால் கொல்லப்பட்டும்
என் தனிமை !!
******************************************************

எனக்கென ஒரு அறை,
ஒரு தொலைகாட்சி பெட்டி,
ஒரு தொலைபேசி,
அதே போல் ,ஒரு தனிமை !!
*****************************************************
நினைவுகளை பின்னே தள்ளி,
திரும்பி வராத இனிய நாட்களை எண்ணி,
முடங்கி போகிறேன், யாருமில்லா,
வெட்டவெளியில் மூச்சு திணறலாய்,
என் தனிமையோடு !!