Wednesday, February 16, 2011

பனித்துளி


இதயம் விரித்து 
சிறகடித்து பறக்க 
ஆசை தேவைப்படுவதில்லை
ஓர் அன்பு மட்டுமே அவசியப்படுகிறது..

மேக நிழலை 
கிழித்து துவங்கும் 
முதல் துளியாய்
உயிர் தொட துவங்கிவிடுகிறது 
அதற்கான ஓர் எதிர்பார்ப்பு ..

சுவாசம் மட்டும் 
தொடும் தூரத்தில் 
பார்வை உரையாடலாய்
ஓர் இனிமை கொலைக்கு 
இடைவெளி விட்டு நகரும் 
சின்ன சிணுங்கல்கள் , 
அன்பு நிரப்பிய 
ஓர் இதயத்திற்காக ..

அங்கே 
மழை நனைக்க மறுக்கும் என்னை 
ஓர் பனித்துளி முழுதாய்
நனைத்துவிட்டு போய்விடும் ..

Monday, January 31, 2011

அன்னியம்


எழுதிக்கொள்ளுங்கள்
இன்றே, இப்பொழுதே
உங்கள் உள்ளங்களில்
நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்
விருப்பமோ, வெறுப்போ
காதலோ , தேவையோ, நட்போ
ஏதேனும் ஒன்றை எழுதிக்கொள்ளுங்கள்..

வெற்றுத்தாளாய் விட்டுச்செல்லும்
ஒவ்வொரு உள்ளத்திலும்
கிறுக்கல்களே மிஞ்சுகின்றன

அர்த்தமில்லா ரணம் கக்கும்
ஒவ்வொரு கிறுக்கல்களும்
மௌன பாடமொன்றை
படித்து போய்விடுகின்றன

விட்டெறிந்த கல்லின்
வீச்சம் குறையாது
உடைத்துப் போயிருந்த
ஒவ்வொரு உள்ளத்தின் சார்பாய்
கண்ணீர் மட்டுமே
பேசிவிடுகிறது

ஆம் ,
எழுதிக்கொள்ளுங்கள்
இன்றே,
இல்லையேல்
அவரவர் உலகில்
அன்னியமாகி போய்விடுங்கள் !!