Thursday, July 15, 2010

இருள் உமிழும் தனிமை

இருட்டறையின்
நிசப்த கொலைக்கு
சாட்சியாய் வெளியேறுகிறது
என் தலையணை நனைக்கும்
கண்ணீர்த் துளி!!
 ***
நித்திரையில்லா
நடுநிசியில்
வார்த்தை  பிச்சைக்காரி
என்னிடம்,
எச்சில் உமிழ்கிறது
என் எதிர்ப்பார்ப்புகளை
இழுத்துச் சுத்தும்
அறை காத்தாடி!!
 ***
இருளில் கழித்த
தனிமைக்கு
எனை விற்ற விலையின்னும்
தெரியவில்லை!!
தனிமையை கையகப்படுத்திட
என் பேனாவிற்கு
வெற்றுத்தாள் துணைவர
அமையவில்லை!!!
விற்றதற்காகவும் தொலைத்தற்காகவும்
அழுது தீர்க்கிறோம்
நானும் என் பேனாவும்!!
 ***
என் அறையின்
ஒவ்வொரு மூலையின்
சமிக்ஞையையும் சுட்டிக்காட்டுகின்றன
ஒவ்வொரு இரவின்
தனிமை மரணத்தையும்
ஒவ்வொரு பொழுதின்
தனிமை விடியலையும்!!
 ***
ஒரு மழை நாளின் 
சன்னலோர துளியோடு
இசைந்து போகவும்
அசை போட நினைவுமாய்
பயணத்தை சுமக்க
எத்தனிக்கிறேன்!!

Friday, July 9, 2010

படிக்கட்டு

அந்தப் படிக்கட்டின்
ஒவ்வொரு வளைவுகளும் 
உனக்காக காத்திருந்து 
என் விரல் உரசிய 
கைப்பிடியை எள்ளி 
நகையாடுகின்றன!

மழையின் 
முதல் துளி தொடங்கி
சீற்றம் வற்றிய
கடைசித் துளி வரையிலான
அமைதியையும் இரைச்சலையும் 
பார்த்தாகிவிட்டது !

கடந்து போகிறேன்
ஒவ்வொரு படியும்
ஒவ்வொரு நினைவாய்
திரும்பி பார்க்கையில்
தொற்றிக் கொள்கிறது
ஓர் அசூயை !

கேட்டு முடித்த வார்த்தைகளும்
சொல்ல துடித்த இதயமும்
வந்து விழுகிறது 
கண்ணீராய்!!
*
நன்றி : http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthypoem070710.asp

Thursday, July 1, 2010

கேள்வி நேரம்

இன்னிக்கு எனக்கு நிறைய  எழுதனும்னு தோணுது. காரணமும், காரணகர்தாவையும்  தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
வாழ்க்கைல நம்மள கடந்து போகுற சில மனிதர்களுக்கும், அவர்கள் கடக்கும் அந்த தருணங்களுக்கும் நாம் பேர் வைக்க முடியாது. ஆனா அந்த சில மனிதர்களும் , அந்த தருணங்களுக்கும் நிறைய தாக்கம் உண்டு , அது  நமக்குள்ள எப்போவுமே மறைமுகமாவோ, நிதர்சனமாவோ நிச்சயம் இருக்கும். 

அந்த எண்ணங்கள்  எப்பவுமே இரண்டு விதமா நமக்குள்ள வேலை பார்க்கும். ஒன்னு நம்ம மனச கசக்கி நம்மள இருக்குற நிலைலேந்து  திருப்பி போட்டுடும். நல்ல தானேயா சிரிச்சிட்டு இருந்தான் என்ன ஆச்சு திடீர்னு அப்படின்னு மத்தவங்களுக்கு  தோணும்.

ரெண்டாவது நெனச்சாலே அப்படியே ஒரு வித இனம் புரியாத பூரிப்பு தோணும். நம்மள அறியாம  ஒஉர் புன்னகை உதட்டுல  உலவும். ஆனா இதுவும் நம்மள இருக்குற நிலைலேந்து திருப்பி போட்டுடும்.

ஆனா அது வேற இது வேற.

இந்த ரெண்டு விஷயத்துலயும் சம்பந்த பட்ட மனிதர்கள் , அவர்கள் கூட இருந்த நேரங்கள், இல்ல சில பல நினைவுகள், இல்ல அவர்கள் சம்பந்தப்பட்ட செய்கைகள் மேற்கூறிய இரண்டு நிலைமைல  ஒன்னுக்குள்ள உங்கள கூட்டிட்டு போய்டும்.

இப்போ என் கேள்வி என்னன்னா? 
இந்த மாதிரி ஒரு சூழல்  உங்களுக்கு வந்த அந்த நிலைமையில்  அதை எப்படி எடுத்துக்குவீங்க ? என்ன ஆச்சு உனக்கு அப்படின்னு  என்ன கேள்வி கேட்க வேண்டாம்!! இது ஒரு பொதுவான நிலைமை நாம் அன்றாட வாழ்க்கை வண்டியின் ஒரு பயணம் தான். நிச்சயமா எல்லாரும் இது போல பயணம் செஞ்சி இருப்பீங்க.
பொதுவான விஷயமா இது கையாண்டா நிறைய விளக்கம்  கிடைக்கும்னு நம்புறேன்... ஆவலுடன் !!!

நிறைய எண்ண மீன்களை தூண்டில் போட்டு பிடிக்க விரும்பும் என் விளையாட்டுக்கு தீனி போடும் முயற்சி இது !!!

மொக்க போஸ்டுன்னு திரும்பி போயிராதீங்க  !!! ஒரு பதில சொல்லிபுட்டு போங்கப்பு !!!!