Wednesday, February 16, 2011

பனித்துளி


இதயம் விரித்து 
சிறகடித்து பறக்க 
ஆசை தேவைப்படுவதில்லை
ஓர் அன்பு மட்டுமே அவசியப்படுகிறது..

மேக நிழலை 
கிழித்து துவங்கும் 
முதல் துளியாய்
உயிர் தொட துவங்கிவிடுகிறது 
அதற்கான ஓர் எதிர்பார்ப்பு ..

சுவாசம் மட்டும் 
தொடும் தூரத்தில் 
பார்வை உரையாடலாய்
ஓர் இனிமை கொலைக்கு 
இடைவெளி விட்டு நகரும் 
சின்ன சிணுங்கல்கள் , 
அன்பு நிரப்பிய 
ஓர் இதயத்திற்காக ..

அங்கே 
மழை நனைக்க மறுக்கும் என்னை 
ஓர் பனித்துளி முழுதாய்
நனைத்துவிட்டு போய்விடும் ..

Monday, January 31, 2011

அன்னியம்


எழுதிக்கொள்ளுங்கள்
இன்றே, இப்பொழுதே
உங்கள் உள்ளங்களில்
நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்
விருப்பமோ, வெறுப்போ
காதலோ , தேவையோ, நட்போ
ஏதேனும் ஒன்றை எழுதிக்கொள்ளுங்கள்..

வெற்றுத்தாளாய் விட்டுச்செல்லும்
ஒவ்வொரு உள்ளத்திலும்
கிறுக்கல்களே மிஞ்சுகின்றன

அர்த்தமில்லா ரணம் கக்கும்
ஒவ்வொரு கிறுக்கல்களும்
மௌன பாடமொன்றை
படித்து போய்விடுகின்றன

விட்டெறிந்த கல்லின்
வீச்சம் குறையாது
உடைத்துப் போயிருந்த
ஒவ்வொரு உள்ளத்தின் சார்பாய்
கண்ணீர் மட்டுமே
பேசிவிடுகிறது

ஆம் ,
எழுதிக்கொள்ளுங்கள்
இன்றே,
இல்லையேல்
அவரவர் உலகில்
அன்னியமாகி போய்விடுங்கள் !!

Sunday, December 12, 2010

ஓர் மலர், ஓர் பீடித்துண்டு , ஓர் அறிவு



"சரோஜா weds சாமுவேல்"
மலர்களாலான எழுத்துக்களில் 
எந்த மலரில் 
தன் ஆசைகளை தைத்திருப்பான்
அவன் ?

******
சொருகிப்போயிருந்த கண்கள் 
குழி விழுந்த கன்னம் 
கறுத்து தடித்த தோல்
அழுக்கு ஆடை, உச்சிவெயிலின் 
நீர்கண்டிரா தார்ச்சாலையில் 
ஒரு பீடித்துண்டு 
அவனை குடித்துக்கொண்டிருந்தது...

******
மாலை தனிமை எழுது
என்றான் நண்பன் ,
ஒரு மழை நாள் நடந்ததை எழுது
என்றது மனம்,
புரிதலே இல்லை 
எழுதி ஒன்றும் ஆவதில்லை 
அறைந்து சொன்னது 
ஆறாவது அறிவு !!



டிஸ்கி : இவை என் கிறுக்கல்கள் மட்டுமே...

Tuesday, October 26, 2010

அது

சொல்லமுடியா ஓர் உணர்வுக்குள்
சிக்கித்  தவிக்கிறேன்
இன்பத்திற்கு  அது இணையில்லை
‘வலி’ மட்டுமே  என்று  பெயரிடவிருப்பமில்லை
உணர்ந்து  பாருங்கள்
என்றுரைக்கமட்டேன்,
வெட்டவெளியில் உருவமில்லா
கருநிற இருளாய் 
ஒவ்வொரு இரவும் என்னை
ஆட்கொள்(ல்)கிறது ... 
ரத்தமும்  சதையுமாய் மட்டுமே
நான் படைக்கப்பட்டிருக்கிறேன்
எதைத் தேடியே  என் பயணம்?
ஒலிக்க முடியா நேரத்தில்
ஆயிரம் வயலின்களின்  ஒட்டுமொத்த
இசையும் நரம்பறுத்த
நொடியில்  என்னுடன்
படுக்கையைப்
பகிர்ந்துவிடுகிறது
அந்த உணர்வு...  
“அது” என உணர்வுக்குப்
பெயரிட்டு
நாளையேனும் 
நான் நானாய்  வாழ்வேனென
ஒவ்வொரு   விடியலிலும்
என்னை நானே பிரசவிக்கிறேன் !!!! 



நன்றி : http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3556

Friday, September 10, 2010

சாத்தான் படலம்

அழுது நனைத்த
தலையணையில்
உமிழ்ந்து படர்கிறது
இரக்கமின்மை
பிரிவு குறித்த
சேதி சொல்லி
எக்களிக்கும், தெறித்து பிரிந்த
மின்னல் கீற்றுகள்
இருவழிப் பாதையில்
நடுக்கோட்டின் வழியே
தனியே நகரும்
மனம்
ஆடி களிக்க
வார்த்தை விளையாட்டு உனக்கு,
அலரி அழ 'ஆ, ஊ ,ஓ..' போதுமே
எனக்கு
எச்சமிடம் ஓலத்தின்
நாயகனாய் போயிருந்த
தனிமை ,
காதல் தொலைத்து
முக்கி முனகி, மீண்டு எழ
அனைவருக்கும் தேவதையாகி
போன தருணத்தில் எனக்கு நான்
சாத்தனாகி போயிருந்தேன் !




அன்றொரு மழை நாள் II

செல்லச் சண்டையின்
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி
அழிந்து போன
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!

அன்றொரு மழை நாள் I

சன்னலோர கம்பிகளின்
மழைத் துளி வழியே 
பயணம்
தேனீர் கோப்பையும்
தீராத தாகமுமாய்
தனித்து விடப்பட்டு
நினைவுகளை
அள்ளி பருகிக்கொள்கிறேன்
துளிர்த்துக் கிளம்பும்
மண்வாசனையோடு - இதயம்
வெடித்துக்கிளம்பும்
என் விதிகளுக்கு அடங்காத
எண்ணங்கள்
கொட்டிதீர்க்கும் மழையினூடே
உலர்ந்த உள்ளமுமாய்
ரகசியமாய் என் கண்ணீரும்
உலவி போகும் உணர்வுகளற்ற
உதட்டு புன்னகை
முழுவதையும் கரைக்க
மழையும் முயற்சிகிறதோ?


நன்றி :http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthipoem310710.asp